உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர்.
uTaiyArmun illArpOl EkkaRRung kaRRArkaTaiyarE kallA tavar
Maruthi Nambi Narayanan
பொருள் / உரை
முருகா எளிய உரை
செல்வந்தர் முன் ஏழை பணிந்து நிற்பது போல ஆசிரியரிடம் பணிவோடு அடங்கி நின்று கல்வியைக் கற்றறிந்தவர்களே உயர்ந்தோராவர்; அவ்வாறு பணிந்து கற்கத் தயங்கிப் படிக்காதவர்கள் இழிந்த கடைநிலை மனிதர்களே ஆவர்.
• உடையார் முன் இல்லார் போல் = செல்வந்தர் முன்னே நின்று உதவி கேட்கும் ஏழையைப் போலப் பணிவோடும் பணிவான ஏக்கத்தோடும்,• ஏக்கற்றும் கற்றார் = ஆசிரியரிடம் தலைதாழ்த்திப் பணிந்து நின்று கல்வியைக் கற்றுத் தேர்ந்தவர்களே உயர்ந்த மனிதர்கள் ஆவர்;• கல்லாதவர் = அவ்வாறு பணிந்து கற்க வெட்கப்பட்டு அறியாமையிலேயே மூழ்கிக் கிடப்பவர்கள்• கடையரே = மாந்தர்களுள் மிகக் கீழான கடைநிலை மனிதர்களே ஆவர்.
மு.வரதராசன்
செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.
பரிமேலழகர்
உடையார், இல்லார் என்பன உலகவழக்கு. ஏக்கறுதல் ஆசையால் தாழ்தல். கடையர் என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார். இதனால் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன.
சாலமன் பாப்பையா
செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.
Meaning in English
The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy.





