கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்.
kaNNuTaiya renpavar kaRROr mukattiraNTupuNNuTaiyar kallA tavar
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
உண்மையான அறிவுக்கண் பெற்றவர்கள் என்று போற்றப்படுவோர் கல்வி கற்றவர்களே ஆவர்; கல்வி கற்காதவர்களோ தம் முகத்தில் கண்கள் என்ற பெயரில் எதையும் உள்ளபடி காண முடியாத இரண்டு புண்களையே சுமந்து வாழ்கின்றனர்.
• கண் உடையர் என்பவர் = உண்மைப் பொருளை உள்ளபடி காணும் 'கண்களைப் பெற்றவர்கள்' என்று போற்றப்படுவோர்• கற்றோர் = நல்ல நூல்களைக் கற்றறிந்த அறிஞர்களே ஆவர்;• கல்லாதவர் = கல்வி கற்காத பாமரர்களோ,• முகத்து இரண்டு = தம் முகத்தில் கண்கள் என்ற பெயரில் பார்வை இல்லாத• புண் உடையர் = இரண்டு 'புண்களையே' சுமந்து வாழ்பவர்கள் ஆவர்.
மு.வரதராசன்
கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.
பரிமேலழகர்
கண் உடையர் என்பவர் கற்றோர் - கண்ணுடையர் என்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே, கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர் - மற்றைக் கல்லாதவர் முகத்தின்கண் இரண்டு புண்ணுடையர், கண்ணிலர் (தேயம்இடையிட்டவற்றையும் காலம்இடையிட்டவற்றையும் காணும் ஞானக்கண்உடைமையின் கற்றாரைக் கண்ணுடையர் என்றும் அஃதின்றி நோய்முதலியவற்றால் துன்பம் செய்யும் ஊனக்கண்ணேஉடைமையின், கல்லாதவரைப் புண்ணுடையர் என்றும் கூறினார்.மேல் கண்ணன்மை உணரநின்ற ஊனக்கண்ணின் மெய்ம்மைகூறியவாற்றான் , பொருள் நூல்களையும் கருவிநூல்களையும்கற்றாரது உயர்வும், கல்லாதாரது இழிவும் இதனான் தொகுத்துக்கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா
கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.
Meaning in English
Men who learning gain have eyes, men say; Blockheads' faces pairs of sores display





