Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 392

பொருட்பால்அரசியல்40. கல்வி

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

eNNenpa Enai yezhuttenpa ivviraNTungkaNNenpa vAzhum uyirkku

Thirukkural

பொருள் / உரை

முருகா எளிய உரை

கணிதக் கலை மற்றும் மொழியறிவு (எண்ணும் எழுத்தும்) ஆகிய இரண்டும் இவ்வுலகில் வாழும் மனிதர்களுக்கு உலகத்தை உணர்ந்து வாழ உதவும் இரண்டு கண்கள் என்று அறிஞர்கள் கூறுவர்.

• எண் என்ப = கணித அறிவு என்று சொல்லப்படுவதும்,• ஏனை எழுத்து என்ப = மொழியறிவு (இலக்கியம் மற்றும் இலக்கணம்) என்று சொல்லப்படுவதும்,• இவ்விரண்டும் = ஆகிய இந்த இரண்டு கல்விக் கலைகளையும்• வாழும் உயிர்க்கு = இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்களுக்கு• கண் என்ப = உலகத்தை உள்ளபடி கண்டுணர உதவும் 'இரண்டு கண்கள்' என்று சான்றோர் கூறுவர்.

மு.வரதராசன்

எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

பரிமேலழகர்

எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் - அறியாதார் எண் என்று சொல்லுவனவும் மற்றை எழுத்து என்று சொல்லுவனவும் ஆகிய கலைகள் இரண்டினையும், வாழும் உயிர்க்குக் கண் என்ப - அறிந்தார் சிறப்புடை உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர். (எண் என்பது கணிதம். அது கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவை ஏரம்பம் முதலிய நூல்களுள் காண்க. எழுத்து எனவே, அதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று. இவ்விருதிறமும்,அறமுதற்பொருள்களைக் காண்டற்குக் கருவியாகலின், கண் எனப்பட்டன.அவை கருவியாதல் 'ஆதி முதலொழிய அல்லாதன எண்ணி. நீதி வழுவா நிலைமையவால் - மாதே, அறமார் பொருள் இன்பம் வீடுஎன்று இவற்றின் , திறமாமோ எண்ணிறந்தால் செப்பு'. 'எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான், மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும், மொழித்திறத்தின், முட்டறுத்த நல்லோன் முதல் நூல் பொருள் உணர்ந்து , கட்டறுத்து வீடு பெறும்'. இவற்றான் அறிக. 'என்ப' என்பவற்றுள் முன்னைய இரண்டும் அஃறிணைப் பன்மைப் பெயர். பின்னது உயர்திணைப் பன்மை வினை. அறியாதார், அறிந்தார் என்பன வருவிக்கப்பட்டன. சிறப்புடைய உயிர் என்றது மக்கள் உயிருள்ளும் உணர்வு மிகுதி உடையதனை. இதனால் கற்கப்படும் நூல்கட்குக் கருவியாவனவும் அவற்றது இன்றியமையாமையும் கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.

Meaning in English

The twain that lore of numbers and of letters give Are eyes, the wise declare, to all on earth that live

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout