Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 391

பொருட்பால்அரசியல்40. கல்வி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.

kaRka kasaTaRak kaRpavai kaRRapinniRka ataRkut taka

Thirukkural

பொருள் / உரை

முருகா எளிய உரை

கற்கத் தகுந்த நல்ல நூல்களைக் குற்றமும் சந்தேகமும் இன்றித் தெளிவாகக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு, தான் கற்ற கல்விக்குத் தகுந்தபடி நேர்மையான ஒழுக்க நெறியில் உறுதியாக நின்று வாழ வேண்டும்.

• கற்பவை = வாழ்க்கைக்கு நலம் தரும் உயர்ந்த நூல்களை,• கசடு அற = எவ்விதச் சந்தேகமும் குற்றமும் பிழையும் இல்லாதவாறு தெளிவாக,• கற்க = ஆழமாகக் கற்றுத் தேற வேண்டும்;• கற்றபின் = அவ்வாறு நன்மைகளைக் கற்றுத் தேர்ந்த பிறகு,• அதற்குத் தக நிற்க = தான் கற்ற அந்த உயர்ந்த கல்விக்கு ஏற்பத் தன் வாழ்வில் ஒழுக்க நெறியில் வழுவாமல் நின்று வாழ வேண்டும்.

மு.வரதராசன்

கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

பரிமேலழகர்

கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. ('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் 'கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்த'லினும் (நாலடி. 250)துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை. சிறப்புடை மகற்காயின்கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும்நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும்இதனாற் கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.

Meaning in English

So learn that you may full and faultless learning gain, Then in obedience meet to lessons learnt remain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout