கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உடையானாம் வேந்தர்க் கொளி.
koTaiyaLi sengkOl kuTiyOmpal nAnkumuTaiyAnAm vEntark koLi
Kritika Shivasubramanian
பொருள் / உரை
முருகா எளிய உரை
இல்லாதவர்க்கு வழங்கும் கொடை, அனைவரிடமும் காட்டும் கருணை, நடுநிலையான நீதி ஆட்சி, நலிவடைந்த மக்களைப் பேணிப் பாதுகாத்தல் ஆகிய நான்கு நற்குணங்களையும் கொண்ட ஆட்சியாளனே, உலக அரசர்களுக்கெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கம் போன்றவன் ஆவான்.
• கொடை = இல்லாதவர்க்கு வாரி வழங்கும் ஈகைக் குணம்,• அளி = எளிய மக்கள் மீது காட்டும் கருணை அன்பு,• செங்கோல் = நடுநிலை தவறாத நீதி வழுவாத ஆட்சி,• குடி ஓம்பல் = வறுமையாலும் சோதனைகளாலும் தளர்ந்த குடிமக்களைத் தாங்கிப் பாதுகாத்துப் பேணுதல்,• நான்கும் உடையான் = ஆகிய இந்த நான்கு சிறப்புகளையும் உடைய ஆட்சியாளனே,• வேந்தர்க்கு ஒளி ஆம் = உலகத்து மன்னர்களுக்கெல்லாம் வழிகாட்டும் பேரொளி விளக்குப் போன்றவன் ஆவான்.
மு.வரதராசன்
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.
பரிமேலழகர்
கொடை - வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும், அளி- யாவர்க்கும் தலையளி செய்தலும், செங்கோல் - முறை செய்தலும், குடி ஓம்பல் - தளர்ந்த குடிகளைப் பேணலும் ஆகிய, நான்கும் உடையான் -இந்நான்கு செயலையும் உடையான், வேந்தர்க்கு ஒளியாம் - வேந்தர்க்கு எல்லாம் விளக்கு ஆம். (தலையளி - முகம் மலர்ந்து இனிய கூறல், செவ்விய கோல்போறலின், 'செங்கோல்' எனப்பட்டது. 'குடி ஓம்பல்' எனஎடுத்துக் கூறியமையால், தளர்ச்சி பெற்றாம். அஃதாவது,ஆறில் ஒன்றாய பொருள் தன்னையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல்வேண்டின், அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின்இழத்தலும் ஆம். சாதி முழுதும் விளக்கலின், 'விளக்கு'என்றார். ஒளி - ஆகுபெயர். இவை ஐந்து பாட்டானும் மாட்சியும்பயனும் உடன் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா
தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.
Meaning in English
Gifts, grace, right sceptre, care of people's weal; These four a light of dreaded kings reveal





