இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்தான்கண் டனைத்திவ் வுலகு.
insolAl IttaLikka vallARkut tansolAltAnkaN Tanaittiv vulaku
Kavitha Ilango
பொருள் / உரை
முருகா எளிய உரை
இனிய சொற்களைப் பேசி, இல்லாதவர்க்கு வாரி வழங்கி, மக்களைத் துன்பமின்றிப் பாதுகாக்க வல்ல தலைவனுக்கு, இந்த உலகமே அவனது புகழோடு இணைந்து அவன் விரும்பிய நன்மைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தரும்.
• இன்சொலால் = மக்களிடம் கனிவான இனிய சொற்களைப் பேசி,• ஈத்து = தன்னிடம் உள்ள பொருள்களை வாரி வழங்கி,• அளிக்க வல்லாற்கு = அவர்களை எவ்விதத் துன்பமும் அணுகாமல் காக்க வல்ல சிறந்த ஆட்சியாளனுக்கு,• இவ்வுலகு = இந்த அகில உலகமும்• தன் சொலால் = அவனது நல்ல புகழோடு பொருந்தி,• தான் கண்டு அனைத்து = அவன் தன் மனதால் விரும்பிய வண்ணம் நல்லாட்சிக்குரிய எல்லாக் காரியங்களையும் நிறைவேற்றித் தரும்.
மு.வரதராசன்
இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.
பரிமேலழகர்
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு, இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து - இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம். (இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல்காத்தல். இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும்கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்.)
சாலமன் பாப்பையா
இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.
Meaning in English
With pleasant speech, who gives and guards with powerful liberal hand, He sees the world obedient all to his command





