காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்மீக்கூறும் மன்னன் நிலம்
kATsi keLiyan kaTunjsollan allanElmIkkURum mannan nilam
Sutharshini Koneswaran
பொருள் / உரை
முருகா எளிய உரை
நீதி கேட்டு வரும் எளிய மக்களும் எளிதில் தன்னைச் சந்திக்கும் எளிய அணுகுமுறையும், யாரிடமும் கடுஞ்சொல் பேசாத இன்சொல் பண்பும் கொண்டு ஒரு மன்னன் ஆட்சி செய்தால், அவனது நாட்டை உலகம் மிகவும் உயர்த்திப் போற்றும்.
• காட்சிக்கு எளியன் = நீதி வேண்டியும் உதவி வேண்டியும் வரும் எளிய மக்களும் எளிதில் நேரில் சந்திக்கும் வண்ணம் எளியவனாகவும்,• கடுஞ்சொல்லன் அல்லனேல் = யாரிடத்திலும் மனத்தைப் புண்படுத்தும் கடுமையான சொற்களைப் பேசாத இன்சொல்லனாகவும் அரசன் இருந்தால்,• மன்னன் நிலம் = அந்த மன்னன் ஆளுகின்ற நாட்டை• மீக்கூறும் = உலக மக்கள் எல்லாரும் மற்ற எல்லா நாடுகளையும் விட மிகவும் உயர்த்திப் புகழ்ந்து பேசுவார்கள்.
மு.வரதராசன்
காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.
பரிமேலழகர்
காட்சிக்கு எளியன் - முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய், கடுஞ்சொல்லன் அல்லனேல் - யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆயின். மன்னன் நிலம் மீக்கூறும் - அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம் . (முறை வேண்டினார், வலியரான் நலிவு எய்தினார். குறை வேண்டினார், வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது, பேர் அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்தல். கடுஞ்சொல்: கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல் 'இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று' என்றல். 'உலகம்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.)
சாலமன் பாப்பையா
நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்)
Meaning in English
Where king is easy of access, where no harsh word repels, That land's high praises every subject swells





