Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 380

அறத்துப்பால்ஊழியல்38. ஊழ்

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினுந் தான்முந் துறும்.

UzhiR peruvali yAvuLa maRRonRusUzhinun tAnmun tuRum

T. K. Murthy

பொருள் / உரை

முருகா எளிய உரை

முற்பிறவி வினைப்பயனாக வரும் விதியை விட மிகுந்த ஆற்றல் வாய்ந்தது உலகில் வேறு எதுவுமே இல்லை; அந்த விதியைத் தடுப்பதற்கு மனிதன் வேறு பல உபாயங்களைத் திட்டமிட்டாலும், அந்த உபாயத்தின் வழியிலேயே விதி முந்தி வந்து நின்று தன் வலிமையைக் காட்டும்.

• ஊழின் = அவரவர் முற்பிறவி வினைப்பயனாக வரும் விதியை விட• பெருவலி யா உள = மிகுந்த வலிமையுடைய ஆற்றல்கள் இவ்வுலகில் வேறு எவை இருக்கின்றன?• மற்று ஒன்று சூழினும் = அந்த விதியைத் தடுப்பதற்காக ஒருவன் வேறு ஏதாவது உபாயத்தைத் திட்டமிட்டாலும் கூட,• தான் முந்துறும் = அந்த உபாயத்தின் வழியாகவே அந்த விதி அவனுக்கு முன்பாக வந்து நின்று தன் பலனைத் தரும்.

மு.வரதராசன்

ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

பரிமேலழகர்

மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும் , தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும், ஊழின் பெருவழி யா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாஉள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள? ('பெருவலி' ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதி கொடாது என்றமையின், உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?

Meaning in English

What powers so great as those of Destiny? Man's skill Some other thing contrives; but fate's beforehand still

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout