Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 379

அறத்துப்பால்ஊழியல்38. ஊழ்

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லற் படுவ தெவன்.

nanRAngkAl nallavAk kANpavar anRAngkAlallaR paTuva tevan

Vijay Krishnan

பொருள் / உரை

முருகா எளிய உரை

நல்வினை வரும் போது அதனை விரும்பி ஏற்று மகிழ்ச்சி அடையும் மனிதர்கள், அதற்கு மாறாகத் தீவினை வரும் போது மட்டும் கலங்கித் துயரப்படுவது ஏன்? (முற்பிறவியில் தாமே செய்த வினைகளின் பயன் என்பதால் இரண்டையுமே சமநோக்குடன் ஏற்க வேண்டும்).

• நன்று ஆங்கால் = நல்வினைப் பயனால் இன்பமும் நன்மைகளும் கூடிவரும் போது,• நல்லவாக் காண்பவர் = அவற்றை விரும்பி ஏற்று மகிழ்ச்சியோடு அனுபவிக்கின்ற மனிதர்கள்,• அன்று ஆங்கால் = தீவினைப் பயனால் அதற்கு மாறாகத் துன்பமும் இழப்பும் நேரும் போது,• அல்லற்படுவது எவன் = அதையும் தன் வினைப்பயன் என்று ஏற்காமல் வருந்திக் கலங்குவது ஏன்? (இரண்டையுமே சமமாக ஏற்க வேண்டும்).

மு.வரதராசன்

நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ.

பரிமேலழகர்

நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் - நல்வினை விளையுங்கால், அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்கும் திறன் நாடாது, இவை நல்ல என்று இயைந்து அனுபவிப்பார், அன்று ஆங்கால் அல்லற்படுவது எவன் - ஏனைத் தீவினை விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறு அனுபவியாது, துடைக்கும் திறன் நாடி அல்லல் உழப்பது என் கருதி? (தாமே முன் செய்து கொண்டமையானும், ஊட்டாது கழியாமையானும், இரண்டும் இயைந்து அனுபவிக்கற்பால, அவற்றுள் ஒன்றிற்கு இயைந்து அனுபவித்து, ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் இன்பத்துன்பங்கட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?

Meaning in English

When good things come, men view them all as gain; When evils come, why then should they complain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout