Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 378

அறத்துப்பால்ஊழியல்38. ஊழ்

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின்.

tuRappArman tuppura villAr uRaRpAlaUTTA kazhiyu menin

T. L. Theagaraajan

பொருள் / உரை

முருகா எளிய உரை

அனுபவிப்பதற்கு உடைமைகள் ஏதுமில்லாத ஏழைகள் எளிதில் துறவறம் மேற்கொண்டு முக்தி அடைந்துவிடுவர்; ஆனால் அவர்கள் அனுபவிக்க வேண்டிய விதிப்படியான துன்பங்கள் அவர்களை வாட்டி வதைத்து அனுபவிக்க வைக்காமல் விட்டால் அல்லவா அது நடக்கும்!

• துப்புரவு இல்லார் = அனுபவிப்பதற்குரிய உலகப் பொருட்கள் ஏதுமில்லாத ஏழைகள்,• துறப்பார் = எப்போதோ உலகப் பற்றுகளைத் துறந்து துறவறம் பூண்டு முக்தி அடைந்திருப்பார்கள்;• உறற்பால = ஆனால் அவர்கள் முற்பிறவியில் செய்த வினைகளின் பயனாக அனுபவிக்க வேண்டிய துன்பங்கள்• ஊட்டா கழியும் எனின் = அவர்களை வாட்டி வதைத்து அனுபவிக்க வைக்காமல் விட்டு விலகுமானால் (ஆனால் விதி அவர்களை விடுவதில்லை).

மு.வரதராசன்

வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.

பரிமேலழகர்

துப்புரவு இல்லார் துறப்பார் - வறுமையான் நுகர்ச்சி இல்லாதார் துறக்கும் கருத்துடையராவர், உறற்பால ஊட்டா கழியும் எனின் - ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாது ஒழியுமாயின். ('துறப்பார்' என்பது ஆர்ஈற்று எதிர்கால முற்றுச்சொல். தம்மால் விடப்பெறுவன தாமே விடப்பெற்று வைத்தும், கருத்து வேறுபாட்டால் துன்பமுறுகின்றது ஊழின் வலியான் என்பது எஞ்சி நிற்றலின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.)

சாலமன் பாப்பையா

துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.

Meaning in English

The destitute with ascetics merit share, If fate to visit with predestined ills would spare

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout