ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி.
AkUzhAl tOnRum asaivinmai kaipporuLpOkUzhAl tOnRu maTi
Ramachandran Balasubramanian
பொருள் / உரை
முருகா எளிய உரை
செல்வம் சேருவதற்குக் காரணமான நல்விதி கூடிவரும் போது ஒருவனுக்குத் தளராத கடின உழைப்பும் முயற்சியும் உண்டாகும்; மாறாகச் செல்வம் அழியக்கூடிய விதி நேரும் போது, அவனிடம் அறியாமையால் சோம்பலும் அலட்சியமும் உண்டாகும்.
• கைப்பொருள் ஆகு ஊழால் = ஒருவனுக்குச் செல்வம் சேருவதற்குக் காரணமான நல்விதி (ஆக்கும் ஊழ்) செயல்படும் போது,• அசைவு இன்மை தோன்றும் = அவனிடம் சோர்வில்லாத அயர்வற்ற கடின உழைப்பும் முயற்சியும் உண்டாகும்;• போகு ஊழால் = அவனிடமுள்ள செல்வம் அழிவதற்குக் காரணமான தீவிதி (போக்கும் ஊழ்) செயல்படும் போது,• மடி தோன்றும் = அவனது உள்ளத்தில் சோம்பலும் மறதியும் அலட்சியமும் உண்டாகும்.
மு.வரதராசன்
கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.
பரிமேலழகர்
கைப்பொருள் ஆகுஊழால் அசைவு இன்மை தோன்றும் - ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சி உண்டாம்; போகு ஊழால் மடி தோன்றும் - அஃது அழிதற்குக் காரணமாகிய ஊழான் மடி உண்டாம். (ஆகூழ், போகூழ் என்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக்கப்பட்டுக் காரணப்பொருளவாய் நின்றன. அசைவு -மடி. பொருளின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய முயற்சி மடிகளையும் தானே தோற்றுவிக்கும் என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா
பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.
Meaning in English
Wealth-giving fate power of unflinching effort brings; From fate that takes away idle remissness springs





