அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும்.
avAvinai ARRa aRuppin tavAvinaitAnvENTu mARRAn varum
Abheetha Navaneethan
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு மனிதன் தன் உள்ளத்திலிருந்து ஆசைகளை முழுமையாக வேரறுத்து ஒழித்துவிட்டால், பிறவித் துன்பங்களால் அழியாமல் காக்கக்கூடிய முக்திக்குரிய நற்செயல்கள் அனைத்தும் அவன் விரும்பும் வண்ணமே மிக எளிதாக வந்து கைகூடும்.
• அவாவினை = உலகப் பொருட்களின் மீதான ஆசைகளை• ஆற்ற அறுப்பின் = தன் உள்ளத்திலிருந்து முழுமையாக வேரறுத்து ஒழித்துவிட்டால்,• தவாவினை = பிறவித் துன்பத்தால் அழியாமல் காக்கும் முக்திக்குரிய நற்செயல்கள் அனைத்தும்• தான் வேண்டும் ஆற்றான் = அவன் விரும்புகின்ற வண்ணமே எளிதில் அவனுக்குத்• வரும் = தானே வந்து வாய்க்கும்.
மு.வரதராசன்
ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.
பரிமேலழகர்
அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவினை அஞ்சித் துவரக் கெடுக்க வல்லன் ஆயின், தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும் - அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை, தான் விரும்பும் நெறியானே உண்டாம். (கெடாமை - பிறவித் துன்பங்களான் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினை என்றது, மேற்சொல்லிய துறவறங்களை. 'வினை' சாதி யொருமை. தான் விரும்பும் நெறி மெய்வருந்தா நெறி. 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறுஅறஞ்செய்ய வேண்டா, செய்தன எல்லாம் அறமாம்' என்பது கருத்து. இதனால் அவா அறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.
Meaning in English
Who thoroughly rids his life of passion-prompted deed, Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed





