அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்அற்றாக அற்றது இலர்.
aRRava renpAr avAvaRRAr maRRaiyAraRRAka aRRa tilar
Rish Simenthy
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிறவித் தளையை அறுத்த உண்மையான துறவிகள் எனப் போற்றப்படுவோர் உள்ளத்தில் ஆசைகளை அறுத்தவர்களே ஆவர்; வெளிப்புற உடைமைகளைத் துறந்தும் ஆசையை விடாத மற்றவர்கள் உண்மையான முக்தி நிலையை அடைய மாட்டார்கள்.
• அற்றவர் என்பார் = 'பிறவித் தளையை அறுத்த உண்மையான துறவிகள்' என்று சான்றோரால் போற்றப்படுவோர்• அவா அற்றார் = உலக ஆசைகளை உள்ளத்திலிருந்து முழுமையாக அறுத்தெறிந்த ஞானிகளே ஆவர்;• மற்றையார் = வெளிப்புற உடைமைகளைத் துறந்தும் ஆசையைத் துறக்காத மற்றவர்களோ• அற்றாக = அந்த ஞானிகளைப் போலப் பிறவித் தளைகளை• அற்றது இலர் = முழுமையாக அறுத்தவர்கள் ஆக மாட்டார்கள்.
மு.வரதராசன்
பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
பரிமேலழகர்
அற்றவர் என்பார் அவா அற்றார் - பிறவியற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவா அற்றவர்கள், மற்றையார் அற்றாக அற்றது இலர் - பிற ஏதுக்களற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால் சில துன்பங்கள் அற்றதல்லது அவர்போற் பிறவி அற்றிலர். (இதனால் அவா அறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும் எதிர்மறைமுகத்தானும் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.
Meaning in English
Men freed from bonds of strong desire are free; None other share such perfect liberty





