தூஉய்மை என்பது அவாவின்மை மற்றதுவாஅய்மை வேண்ட வரும்.
tUuymai yenpa tavAvinmai maRRatuvAaymai vENTa varum
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
உள்ளத்தின் உண்மையான ஆன்ம தூய்மை என்பது உலகப் பொருட்களின் மீது பேராசை இல்லாதிருப்பதே ஆகும்; அந்த ஆசையற்ற தூய நிலையானது, அழிவில்லாத முழுமுதற் பரம்பொருளை விரும்பி நாடும்போது மனிதனுக்குத் தானே உண்டாகும்.
• தூஉய்மை என்பது = உள்ளத்தின் மாசற்ற ஆன்ம தூய்மை (முக்தி நிலை) என்பது• அவா இன்மை = உலகப் பொருட்களின் மீது எந்தவொரு பேராசையும் இல்லாதிருத்தலாகும்;• மற்று அது = அந்த ஆசையற்ற தூய மனநிலையானது,• வாஅய்மை வேண்ட வரும் = பரம்பொருளாகிய மெய்ப்பொருளைத் தன் உள்ளத்தில் விரும்பி நாடும்போது தானாகவே வந்து உண்டாகும்.
மு.வரதராசன்
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
பரிமேலழகர்
தூஉய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை,அது வாஅய்மை வேண்ட வரும் - அவ்வவா இல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம். (வீடாவது: உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் ஆகலின்,அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்து, 'தூய்மை' என்பது அவா இன்மை என்றும் மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரால் 'மெய்ம்மை' என்றும் கூறினார். 'மற்று' மேலையது போல வினைமாற்றின்கண் வந்தது. வேண்டுதல் - இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல், வீட்டிற்குப் பரம்பரையான் அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரும் வழியும் இதனால் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா
மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
Meaning in English
Desire's decease as purity men know; That, too, from yearning search for truth will grow





