வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லைஆண்டும் அஃதொப்பது இல்.
vENTAmai yanna vizhusselvam INTillaiANTum aஃtoppa til
Pradeep Swaminathan
பொருள் / உரை
முருகா எளிய உரை
எந்த உலகப் பொருளின் மீதும் பேராசை கொள்ளாமல் வாழும் மனநிறைவை (ஆசையற்ற நிலையை) விடச் சிறந்த பெருஞ்செல்வம் இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை; தேவர்கள் வாழும் மேலுலகிலும் கூட இதற்கு இணையான செல்வம் இல்லை.
• வேண்டாமை அன்ன = எந்த உலகப் பொருளின் மீதும் பேராசை வைக்காத ஆசையற்ற நிலையைப் போன்ற• விழுச்செல்வம் = மிக உயர்ந்த ஒப்பற்ற பெருஞ்செல்வம்• ஈண்டு இல்லை = நாம் வாழ்கின்ற இந்த பூவுலகில் வேறு எதுவும் இல்லை;• ஆண்டும் = அதுமட்டுமல்லாமல் தேவர்கள் வாழ்கின்ற மேலுலகிலும் கூட• அஃது ஒப்பது இல் = அந்த ஆசையற்ற நிலைக்கு ஈடாக ஒப்பிடக்கூடிய செல்வம் வேறு எதுவுமே இல்லை.
மு.வரதராசன்
அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.
பரிமேலழகர்
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை - ஒரு பொருளையும் அவாவாமையை ஒக்கும் விழுமிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகின்கண் இல்லை, ஆண்டும் அஃது ஒப்பது இல் -இனி அவ்வளவேயன்று, கேட்கப்படுகின்ற துறக்கத்தின்கண்ணும் அதனை ஒப்பது இல்லை. (மக்கள் செல்வமும் தேவர் செல்வமும் மேன்மேல் நோக்கக் கீழாதல் உடைமையின், தனக்கு மேலில்லாத வேண்டாமையை 'விழுச்செல்வம்' என்றும், அதற்கு இரண்டு உலகினும் ஒப்பதில்லை என்றும் கூறினார். ஆகம அளவை போலாது காட்சி அளவை எல்லாரானும் தெளியப்படுதலின், மக்கள்செல்வம் வகுத்து முன்கூறப்பட்டது. பிறவாமைக்கு வழியாம் எனவும், விழுச்செல்வமாம் எனவும் வேண்டாமையின் சிறப்பு இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.
Meaning in English
No glorious wealth is here like freedom from desire; To bliss like this not even there can soul aspire





