அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்தவாஅப் பிறப்பீனும் வித்து.
avAvenpa ellA uyirkkumenj njAnRuntavAap piRappInum vittu
Steven Samuel Devassy
பொருள் / உரை
முருகா எளிய உரை
எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்திலும் ஒழியாமல் தொடர்ந்து வருகின்ற பிறவித் துன்பங்களை விளைவிக்கின்ற மூல விதை எதுவென்றால், உலகப் பொருட்கள் மீது கொள்ளும் அடங்காத பேராசையே (அவாவே) ஆகும்.
• எல்லா உயிர்க்கும் = உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும்• எஞ்ஞான்றும் = எல்லாக் காலத்திலும்• தவாஅப் பிறப்பு ஈனும் = அழியாமல் தொடர்ந்து வருகின்ற பிறவித் துன்பத்தை விளைவிக்கின்ற• வித்து = மூல விதை எதுவென்றால்,• அவா என்ப = உலகப் பொருட்கள் மீது கொள்ளும் அடங்காத 'பேராசையே' என்று சான்றோர் கூறுவர்.
மு.வரதராசன்
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.
பரிமேலழகர்
எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து - எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து: அவாஅ என்ப - அவா என்று சொல்லுவர் நூலோர். (உடம்பு நீங்கிப்போம் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவ்வவா அக்கதிக்கண் கொண்டுசெல்லும் ஆகலான், அதனைப் பிறப்பீனும் வித்து என்றும் கதிவயத்தான் உளதாய அவ்வுயிர் வேறுபாட்டினும் அவை தன்மை திரியும் உற்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் கால வேறுபாட்டினும் அது வித்தாதல் வேறு படாமையின், 'எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்'என்றும் இஃது எல்லாச் சமயங்கடகும் ஒத்தலான் 'என்ப' என்றும்கூறினார். இதனான்,பிறப்பிற்கு அவா வித்து ஆதல்கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.
Meaning in English
The wise declare, through all the days, to every living thing That ceaseless round of birth from seed of strong desire doth spring





