Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 353

அறத்துப்பால்துறவறவியல்36. மெய்யுணர்தல்

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வானம் நணிய துடைத்து.

aiyattin nIngkit teLintArkku vaiyattinvAna naNiya tuTaittu

Dr. Satrajit Vijayaram V

பொருள் / உரை

முருகா எளிய உரை

சந்தேகங்கள் அனைத்தையும் களைந்து மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்த ஞானிகளுக்கு, தாம் வாழும் இந்த பூவுலகை விட, அடைய வேண்டிய முக்தி உலகமே மிக அருகில் உள்ளதாகும்.

• ஐயத்தின் நீங்கி = கடவுள், ஆன்மா, வினைப்பயன் பற்றிய அனைத்து சந்தேகங்களிலிருந்தும் முழுமையாக விடுபட்டு,• தெளிந்தார்க்கு = மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்த ஞானிகளுக்கு,• வையத்தின் = தாம் இப்போது நின்று வாழ்கின்ற இந்த பூவுலகை விட,• வானம் = முக்தி தரும் மேலான வீட்டுலகமானது• நணியது உடைத்து = மிக மிக அருகில் உள்ளதாக அண்மையிலேயே விளங்கும்.

மு.வரதராசன்

ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

பரிமேலழகர்

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு; வையத்தின் வானம் நணிய துடைத்து - எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து. (ஐயமாவது, பலதலையாய உணர்வு. அஃதாவது மறுபிறப்பும் இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றின் துணிவு பிறவாது நிற்றல், பேய்த்தேரோ புனலோ? கயிறோ அரவோ? எனத்துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றான் பிறர் மதம்களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை ஐயத்தின் நீங்கித் தெளிந்தார் என்றும் அவர்க்குஅவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல்உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தன்வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார். கூறவே ஐயஉணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.

Meaning in English

When doubts disperse, and mists of error roll Away, nearer is heav'n than earth to sage's soul

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout