அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்றது அறம்.
azhukkA RavAvekuLi innAssol nAnkumizhukkA iyanRa taRam
Unnikrishnan
பொருள் / உரை
முருகா எளிய உரை
பொறாமை பேராசை இரண்டும் தவிர்த்தே!பொங்கு சினமும் கடுஞ்சொல்லும் தவிர்த்தே!இந்நான்கு தீமையும் விலகிச் செல்லுமே!இதுவே உண்மையான அறமாகுமே!
• அழுக்காறு = பிறர் நல்வாழ்வைக் கண்டு பொறாமை கொள்ளுதல்,• அவா = அளவுக்கு மீறிய பேராசை கொள்ளுதல்,• வெகுளி = அடக்க முடியாத சினம் கொள்ளுதல்,• இன்னாச்சொல் = மற்றவர் மனம் நோகும் கடுமையான சொற்களைப் பேசுதல்• நான்கும் இழுக்கா = ஆகிய நான்கு தீமைகளுக்கும் தன் மனதில் இடங்கொடாமல் நீக்கி,• இயன்றது அறம் = நல்வழியில் வாழ்வதே உண்மையான அறமாகும்.
மு.வரதராசன்
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
பரிமேலழகர்
அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா - புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி - அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்- அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது. (இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.
Meaning in English
'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath, Lust, evil speech-these four, man onwards moves in ordered path





