Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 346

அறத்துப்பால்துறவறவியல்35. துறவு

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்குஉயர்ந்த உலகம் புகும்.

yAnena tennunj serukkaRuppAn vAnOrkkuyarnta ulakam pukum

Subhasree Thanikachalam

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• யான் என்னும் செருக்கு = அழியும் உடலை 'நான்' என்று எண்ணும் அகங்காரத்தையும்,• எனது என்னும் செருக்கு = புறப் பொருட்களை 'என்னுடையது' என்று கருதும் மமதையையும்• அறுப்பான் = தன் உள்ளத்திலிருந்து அடியோடு வேரறுத்து ஒழிப்பவன்,• வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் = தேவர்களுக்கும் எட்டாத மிக உயர்ந்த முக்தி உலகத்தை (பேரின்ப நிலையை) அடைவான்.எளிய விளக்கம்:உடலை 'நான்' என்றும், உலகப் பொருட்களை 'என்னுடையது' என்றும் கருதும் இருவித ஆணவ மயக்கங்களை அடியோடு வேரறுப்பவன், தேவர்களாலும் அடைவதற்கு அரிய மிக உயர்ந்த முக்திப் பேரின்ப நிலையை அடைவான்.

மு.வரதராசன்

உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

பரிமேலழகர்

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் - தான் அல்லாத உடம்பை 'யான்' என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை 'எனது' என்றும் கருதி, அவற்றின்கண் பற்றுச் செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான், வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் - வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும். (மயக்கம்: அறியாமை. அதனைக்கெடுத்தலாவது, தேசிகர்பால் பெற்ற உறுதிமொழிகளானும்யோகப் பயிற்சியானும் அவை 'யான்' 'எனது' அன்மை தெளிந்து, அவற்றின்கண் பற்றை விடுதல். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது.இதனான், இவ்விருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடுஉளது என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.

Meaning in English

Who kills conceit that utters 'I' and 'mine', Shall enter realms above the powers divine

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout