வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டுஇயற் பால பல.
vENTinuN TAkat tuRakka tuRantapinINTiyaR pAla pala
Vaishali Murthy
பொருள் / உரை
முருகா எளிய உரை
துன்பமில்லாத நிலையான பேரின்பத்தை அடைய விரும்பினால், இளமையும் உடலாற்றலும் உள்ளபோதே உலகப் பற்றுகளைத் துறக்க வேண்டும்; அவ்வாறு பற்றுகளைத் துறந்த பிறகு இவ்வுலகிலேயே ஒருவன் பெறக்கூடிய அமைதியும் தெய்வீக இன்பங்களும் பலவாகும்.
• வேண்டின் = துன்பமற்ற நிலையான பேரின்பத்தை ஒருவன் விரும்பினால்,• உண்டாகத் துறக்க = இளமையும் ஆற்றலும் உடம்பில் இருக்கும்போதே உலகப் பற்றுக்களைத் துறந்துவிட வேண்டும்;• துறந்த பின் = அப்படித் துறந்த பிறகு,• ஈண்டு இயற்பால = இவ்வுலகிலேயே ஒருவன் எளிதில் அனுபவித்து அடையக்கூடிய உயர் இன்பங்கள்• பல = எண்ணிலடங்காத பலவாகும்.
மு.வரதராசன்
துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.
பரிமேலழகர்
துறந்த பின் ஈண்டு இயற்பால பல - எல்லாப் பொருள்களையும் துறந்தால், ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையை உடைய இன்பங்கள் பல, வேண்டின் உண்டாகத் துறக்க - அவ் இன்பங்களை வேண்டின், அவற்றைக்காலம் பெறத் துறக்க. (அவ்வின்பங்களாவன, அப்பொருள்கள் காரணமாக மனம், மொழி, மெய்கள், அலையாது நிற்றலானும், அவை நன்னெறிக்கண் சேறலானும் வருவன. இளமைக்கண் துறந்தான் அவற்றை நெடுங்காலம் எய்துமாகலின், 'உண்டாகத் துறக்க' என்றார். இன்பங்கள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன. இம்மைக்கண் துன்பங்கள் என்பதும் இலவாதலேயன்றி இன்பங்கள் உளவாதலும் உண்டு என்பதாம்.)
சாலமன் பாப்பையா
பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.
Meaning in English
'Renunciation' made- ev'n here true pleasures men acquire; 'Renounce' while time is yet, if to those pleasures you aspire





