ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல.
orupozhutum vAzhva taRiyAr karutupakOTiyu malla pala
Harshininethra
பொருள் / உரை
முருகா எளிய உரை
அடுத்த ஒரு கணப் பொழுதாவது தன் உடலில் உயிர் வாழுமா என்று அறிய முடியாத அற்ப மனிதர்கள், பேராசையால் மனதில் திட்டமிட்டு எண்ணிப் பார்க்கும் உலக ஆசைத் திட்டங்களோ கோடியல்ல, எண்ணிலடங்காத பலவாகும்.
• ஒரு பொழுதும் = அடுத்த ஒரு கணப் பொழுதாவது (ஒரு வேளையாவது)• வாழ்வது அறியார் = தம் உடம்பில் உயிர் நிலைத்து வாழுமா என்ற உண்மையைக் கூட அறிய முடியாத மனிதர்கள்,• கருதுப = தம் மனதில் எண்ணித் திட்டமிடும் பேராசை எண்ணங்களோ• கோடியும் அல்ல பல = ஒரு கோடி மட்டுமல்ல, அதற்கும் மேலாக எண்ணிலடங்காதவையாக உள்ளன.
மு.வரதராசன்
அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.
பரிமேலழகர்
ஒரு பொழுதும் வாழ்வது அறியார் - ஒரு பொழுதளவும் தம் உடம்பும் உயிரும் இயைந்திருத்தலைத் தெளியமாட்டார், கோடியும் அல்ல பல கருதுப - மாட்டாது வைத்தும், கோடியளவும் அன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினையா நிற்பர் அறிவிலாதார். (இழிவு சிறப்பு உம்மையால் பொழுது என்பது ஈண்டுக் கணத்தின்மேல் நின்றது. காரணமாகிய வினையின் அளவே வாழ்தற்கும் அளவாகலின், அஃது அறியப்படாதாயிற்று.பலவாய நினைவுகளாவன: பொறிகளான் நுகரப்படும் இன்பங்கள் தமக்கு உரியவாமாறும் அதற்குப் பொருள் துணைக்காரணம் ஆமாறும், அது தம் முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாம் முயலுமாறும், அவற்றிற்கு வரும் இடையூறுகளும் அவற்றை நீக்குமாறும் நீக்கி அப்பொருள் கடைக் கூட்டுமாறும், அதனைப் பிறர் கொள்ளாமல் காக்குமாறும், அதனால் நட்டாரை ஆக்குமாறும், நள்ளாரை அழிக்குமாறும் தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின. அறிவிலாரது இயல்பின் மேல் வைத்து நிலையாமை கூறியவாறு. இனிக் 'கருதுப' என்பதனை அஃறிணைப் பன்மைப் பெயராக்கி உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா
உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உடம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.
Meaning in English
Who know not if their happy lives shall last the day, In fancies infinite beguile the hours away





