Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 334

அறத்துப்பால்துறவறவியல்34. நிலையாமை

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்வாளது உணர்வார்ப் பெறின்.

nALena onRupOR kATTi uyirIrumvALa tuNarvArp peRin

Srivarsha

பொருள் / உரை

முருகா எளிய உரை

வாழ்க்கையின் மெய்ப்பொருளை உணர்ந்த ஞானிகளுக்கு, 'நாள்' என்பது ஒரு கால அளவு போலத் தோன்றி மனிதனின் ஆயுளை நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்துக் குறைத்துக் கொண்டே செல்லும் ரம்பம்/வாள் போன்றது என்பது தெளிவாக விளங்கும்.

• நாள் என ஒன்று போல் காட்டி = 'நாள்' (ஒரு பொழுது) என்ற இனிய கால அளவைப் போல வெளித்தோற்றத்தில் காட்டி,• உணர்வார்ப் பெறின் = வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து சிந்திக்கும் ஞானிகளுக்கு,• உயிர் ஈரும் = உடம்பில் உள்ள ஆயுளை நாளுக்கு நாள் அறுத்துக் குறைத்துச் செல்லும்• வாளது = ஒரு கொடிய வாள் (ரம்பம்) போன்றதாகும்.

மு.வரதராசன்

வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.

பரிமேலழகர்

நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர் - நாள் என்று அறுக்கப்படுவதொருகாலவரையறைபோலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளினது வாயது உயிர், உணர்வார்ப் பெறின் - அஃது உணர்வாரைப் பெறின். (காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறுபடாமையின், நாள் என ஒன்றுபோல் என்றும் அது தன்னை வாள் என்று உணரமாட்டாதார் தமக்குப் பொழுது போகாநின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் 'காட்டி' என்றும் இடைவிடாது ஈர்தலான் 'வாளின் வாயது' என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியர் ஆகலின் உணர்வார்ப் பெறின் என்றும் கூறினார். உயிர் என்னும் சாதியொருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது அதுவேயாகலின். வாள் என்பது ஆகுபெயர். இனி இதனை நாள் என்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை ஈர்வதொருவாளாம் என்று உரைப்பாரும் உளர் :'என' என்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும், 'ஒன்றுபோல் காட்டி' என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், 'அது' என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை அறிக.)

சாலமன் பாப்பையா

நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.

Meaning in English

As 'day' it vaunts itself; well understood, 'tis knife', That daily cuts away a portion from thy life

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout