நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்கொன்றாகும் ஆக்கங் கடை.
nanRAkum Akkam periteninunj sAnROrkkukkonRAkum Akkang kaTai
Sahana
பொருள் / உரை
முருகா எளிய உரை
எவ்வளவு பெரிய நன்மையும் செல்வமும் கிடைப்பதாக இருந்தாலும் சரி, ஓர் அப்பாவி உயிரைக் கொலை செய்வதன் மூலமாகக் கிடைக்கக்கூடிய எந்தவொரு பயனையுமே சான்றோர்கள் மிகவும் இழிவான ஒன்றாகக் கருதி ஒதுக்குவார்கள்.
• நன்று ஆகும் ஆக்கம் = நன்மையை விளைவிக்கக்கூடிய செல்வம் அல்லது பலன்• பெரிது எனினும் = எவ்வளவு பெரியதாக இருந்தாலும் கூட,• சான்றோர்க்கு = ஒழுக்கமும் ஞானமும் கொண்ட சான்றோர்களுக்கு,• கொன்று ஆகும் ஆக்கம் = ஓர் உயிரைக் கொலை செய்வதன் மூலம் அடையக்கூடிய அந்தப் பயன் அல்லது செல்வம்• கடை = மிக மிக இழிவான கீழான ஒன்றாகும்.
மு.வரதராசன்
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.
பரிமேலழகர்
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - தேவர்பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம் பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும், சான்றோர்க்கு கொன்று ஆகும் ஆக்கம் கடை - துறவான் அமைந்தார்க்கு ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை. (இன்பம் மிகும் செல்வமாவது, தாமும் தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும் செல்வம். அது சிறிதாகலானும். பின்னும் பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக் 'கடை' எனப்பட்டது. துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும், வீடு எய்துவார்க்குக் ஆகாது என்றமையின், விதிவிலக்குகள் தம்முள் மலையாமை விளக்கியவாறாயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.
Meaning in English
Though great the gain of good should seem, the wise Will any gain by staughter won despise





