நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்கொல்லாமை சூழ்வான் தலை.
nilaiyanjsi nIttAru LellAng kolaiyanjsikkollAmai sUzhvAn talai
Vaishnavi Harihara Krishnan
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிறவித் துன்பத்திற்கு அஞ்சி உலகப் பற்றுகளைத் துறந்து துறவியானவர்கள் எல்லாரிலும், கொலைப் பாவத்திற்கு அஞ்சி எந்தவொரு உயிரையும் கொல்லாமல் காக்கும் அகிம்சையைப் போற்றுபவனே தலையாய ஞானி ஆவான்.
• நிலை அஞ்சி = பிறவித் துன்பங்களின் நிலையற்ற தன்மையைக் கண்டு அஞ்சி• நீத்தாருள் எல்லாம் = உலகப் பற்றுகளைத் துறந்து துறவு பூண்டவர்கள் அனைவரிலும்,• கொலை அஞ்சி = கொலை செய்யும் கொடிய பாவத்திற்கு நெஞ்சார அஞ்சி,• கொல்லாமை சூழ்வான் = எந்த உயிருக்கும் தீங்கு செய்யாத அகிம்சை அறத்தைப் போற்றி வாழ்பவனே• தலை = எல்லாரிலும் மேலான தலைசிறந்த ஞானி ஆவான்.
மு.வரதராசன்
வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.
பரிமேலழகர்
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும், கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை - கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமை ஆகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன். (பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம் என்பது ஒன்று இன்றி உள்ளன எல்லாம் துன்பமேயாய நிலைமை. துறவு ஒன்றே ஆயினும், சமய வேறுபாட்டால்பலவாம் ஆகலின், 'நீத்தாருள் எல்லாம்' என்றார்.இதனான் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.
Meaning in English
Of those who 'being' dread, and all renounce, the chief are they, Who dreading crime of slaughter, study nought to slay





