ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்பின்சாரப் பொய்யாமை நன்று.
onRAka nallatu kollAmai maRRatanpinsArap poyyAmai nanRu
Varshan
பொருள் / உரை
முருகா எளிய உரை
தனக்கு இணையில்லாத தலையாய முதல் அறமாக விளங்குவது ஓர் உயிரையும் கொல்லாத 'கொல்லாமை' என்னும் அறமேயாகும்; அதற்கு அடுத்தபடியாக இரண்டாவதாக வைத்துப் போற்றத்தக்கது பொய் பேசாத 'வாய்மை' என்னும் அறமாகும்.
• ஒன்றாக நல்லது = தனக்கு இணையில்லாத ஒப்பற்ற தலையாய முதல் அறமாக விளங்குவது• கொல்லாமை = எந்தவொரு உயிரையும் கொல்லாத அகிம்சை நெறியாகும்;• மற்று = அதற்கு அடுத்தபடியாக• அதன் பின்சார = அதன் பின்னே இணைந்து நிற்கத் தக்கதாக• பொய்யாமை நன்று = பொய் பேசாத வாய்மை நெறி மிகச் சிறந்ததாகும்.
மு.வரதராசன்
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
பரிமேலழகர்
ஒன்றாக நல்லது கொல்லாமை - நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை; பொய்யாமை அதன் பின்சார நன்று - அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நன்று. '('நூலோர் தொகுத்த அறங்களுள்' என்பது அதிகாரத்தான் வந்தது. அதிகாரம் கொல்லாமையாயினும் , மேல் பொய்யாமை பொய்யாமை ஆற்றின் எனவும், யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனவும் கூறினார் ஆகலின் இரண்டு அறத்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே; அது நிகழாமையாற்பொருட்டு, ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்று என்றார். முன் கூறியதில் பின் கூறியது வலியுடைத்து ஆகலின், அதனைப் பின்சார நன்று என்றது, நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும்வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்துவருதலான் என உணர்க. இவை மூன்று பாட்டானும், இவ்வறத்தினது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.
Meaning in English
Alone, first of goods things, is 'not to slay'; The second is, no untrue word to say





