Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 322

அறத்துப்பால்துறவறவியல்33. கொல்லாமை

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

pakuttuNaTu palluyi rOmputal nUlOrtokuttavaRRu LellAn talai

R. Madhumitha

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன்னிடம் உள்ள உணவைப் பசியோடு இருப்பவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டு, எந்த உயிருக்கும் தீங்கு நேராமல் அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதே அறநூல்கள் கூறும் அறங்களிலெல்லாம் தலையாய முதன்மை அறமாகும்.

• பகுத்து உண்டு = பசியோடு வரும் உயிர்களுக்கும் மனிதர்களுக்கும் உணவைப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டு,• பல் உயிர் ஓம்புதல் = பல வகையான உயிர்களையும் கொல்லாமல் பாதுகாத்துக் காப்பாற்றி வாழ்வது,• நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் = அறநூல்களை இயற்றிய ஞானிகள் தொகுத்துக்கூறிய அனைத்து அறங்களிலும்• தலை = தலையாய முதன்மை அறமாகும்.

மு.வரதராசன்

கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

பரிமேலழகர்

பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் - உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு ஐவகை உயிர்களையும் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை -அறநூலை உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம். ('பல்லுயிரும்' என்னும் முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஓம்புதல்: சோர்ந்தும் கொலை வாராமல் குறிக்கொண்டு காத்தல். அதற்குப் பகுத்து உண்டல் இன்றியமையா உறுப்பு ஆகலின் அச்சிறப்புத் தோன்ற அதனை இறந்தகால வினையெச்சத்தால் கூறினார். எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுபடக் கூறுதல் இவர்க்கு இயல்பு ஆகலின், ஈண்டும் பொதுப்பட 'நூலோர்' என்றும் அவர் எல்லார்க்கும் ஒப்ப முடிதலான் 'இது தலையாய அறம்' என்றும் கூறினார்.)

சாலமன் பாப்பையா

இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.

Meaning in English

Let those that need partake your meal; guard every-thing that lives; This the chief and sum of lore that hoarded wisdom gives

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout