நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்.
nOyellA nOyseytAr mElavA nOyseyyArnOyinmai vENTu pavar
Dr. Madhumitha
பொருள் / உரை
முருகா எளிய உரை
துன்பங்கள் அனைத்தும் பிறருக்குத் துன்பம் செய்தவர்களையே இறுதியில் போய்ச் சேரும்; எனவே தனக்கு எந்தத் துன்பமும் இல்லாத அமைதியான வாழ்வை விரும்புகின்றவர்கள், பிறருக்கு ஒருபோதும் தீமை செய்ய மாட்டார்கள்.
• நோய் எல்லாம் = உலகில் துன்பங்கள் மற்றும் நோய்கள் அனைத்தும்• நோய் செய்தார் மேலவாம் = பிற உயிர்களுக்குத் துன்பங்களை விளைவித்தவர்களின் தலைமீதே இறுதியில் வந்து சேரும்;• நோய் இன்மை வேண்டுபவர் = எனவே, தனக்கு எந்தத் துன்பமும் இல்லாத நல்வாழ்வை விரும்புகின்ற சான்றோர்கள்• நோய் செய்யார் = மற்ற எந்த உயிருக்கும் ஒருபோதும் துன்பம் செய்ய மாட்டார்கள்.
மு.வரதராசன்
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
பரிமேலழகர்
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் - இன்னாதன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேல் ஆம், நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் - அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார், பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார். ('உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு விளைவும் 'அதுவே', (சீவக. முத்தி 164) ஆகலின், நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்' என்றார். இது சொற்பொருள் பின்வருநிலை. இவை இரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.
Meaning in English
O'er every evil-doer evil broodeth still; He evil shuns who freedom seeks from ill





