செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.
sellA iTattus sinantItu selliTattumillatanin tIya piRa
Prathibha Padmanabhan
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன்னை விட வலிமை மிகுந்தவர்களிடத்தில் கோபம் கொண்டால் அது உடனே தனக்கே அழிவைத் தரும்; தன்னை விட எளியவர்களிடத்தில் கோபம் கொண்டு கொடுமை செய்தாலும் அதை விடக் கொடிய பாவம் வேறு எதுவும் இல்லை (ஆகவே எவ்விடத்தும் சினம் கொள்ளலாகாது).
• செல்லா இடத்து = தன் அதிகாரம் செல்லாத வலியவர்களிடத்தில்• சினம் தீது = கோபம் கொண்டால் அது தனக்கே அழிவைத் தரும் தீங்காகும்;• செல் இடத்தும் = தன் அதிகாரம் செல்லுபடியாகும் எளியவர்களிடத்தில் கோபம் கொண்டாலும்• அதனின் தீய பிற இல் = அந்தச் சினத்தை விடக் கொடிய பாவம் வேறு எதுவும் இல்லை.
மு.வரதராசன்
பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.
பரிமேலழகர்
சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் 'தனக்கே தீதாம்'; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - மற்றை எளியோர் மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை (செல்லா 'இடத்துச் சினம் பயப்பது' 'இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது 'இம்மைக்கண் பழியும்' மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன பிற இல்லை' என்றார், ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.)
சாலமன் பாப்பையா
பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.
Meaning in English
Where power is none to wreak thy wrath, wrath importent is ill; Where thou hast power thy will to work, 'tis greater, evil still





