பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.
poyyAmai poyyAmai ARRin aRampiRaseyyAmai seyyAmai nanRu
Keethana Sriram
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவன் தன் வாழ்நாளில் பொய் பேசாத வாய்மை என்னும் ஒரே ஒரு அறத்தை மட்டும் தவறாமல் உறுதியாகக் கடைப்பிடித்தாலே போதும்; அவன் மற்ற கடினமான அறச்செயல்களைச் செய்யாமல் விட்டாலும் கூட அது அவனுக்கு மேலான நன்மையையே தரும்.
• பொய்யாமை பொய்யாமை ஆற்றின் = பொய் பேசாத வாய்மை நெறியை ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் தவறாமல் உறுதியாகக் கடைப்பிடிப்பானானால்,• அறம் பிற = அவன் மற்ற விரதங்கள், யாகங்கள், தானங்கள் போன்ற அறச்செயல்களை• செய்யாமை செய்யாமை நன்று = செய்யாமல் விட்டுவிட்டாலும் கூட அது அவனுக்கு மிகவும் நன்மையே தரும்.
மு.வரதராசன்
பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.
பரிமேலழகர்
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - ஒருவன் பொய்யாமையையே, பொய்யாமையையே செய்ய வல்லவனாயின், பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று - அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நன்று (அடுக்கு இரண்டனுள் முதலது இடைவிடாமை மேற்று, ஏனையது துணிவின் மேற்று. 'பல அறங்களையும் மேற்கொண்டு செய்தற்கு அருமையால் சில தவறின் குற்றப்படுதலின், அவை எல்லாவற்றின் பயனையும் தானே தரவற்றாய இதனையே மேற்கொண்டு தவறாமல் செய்தல் நன்று 'என்பார், 'செய்யாமை செய்யாமை நன்று' என்றார்.இதனை இவ்வாறு அன்றிப் 'பொய்யாமையைப் பொய்யாமல் செய்யின் பிற அறம் செய்கை நன்று',எனப் பொழிப்பாக்கி, 'பொய் கூறின் பிறவறம் செய்கை நன்றாகாது' என்பது, அதனால் போந்த பொருளாக்கி உரைப்பாரும் உளர். பிற அறங்களெல்லாம் தரும் பயனைத் தானே தரும் ஆற்றலுடைத்து என மறுமைப்பயனது மிகுதி இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.
Meaning in English
If all your life be utter truth, the truth alone, 'Tis well, though other virtuous acts be left undone





