பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.
poyyAmai yanna pukazhillai eyyAmaiellA aRamun tarum
Tejas Sri Datta
பொருள் / உரை
முருகா எளிய உரை
பொய் பேசாமல் வாழ்வது போல ஒருவனுக்குப் புகழைத் தரும் மாண்பு இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை; அந்த வாய்மை ஒன்றைக் கடைப்பிடித்தாலே போதும், உடல் வருத்தமின்றியே அது மற்ற எல்லா அறங்களின் பயன்களையும் ஒருவனுக்குத் தானாகவே தந்துவிடும்.
• பொய்யாமை அன்ன = பொய் பேசாமல் வாழும் வாய்மை நெறியைப் போல• புகழ் இல்லை = ஒருவனுக்கு நிலையான புகழைத் தரும் குணம் இவ்வுலகில் வேறொன்றும் இல்லை;• எய்யாமை = உடல் வருத்தம் மற்றும் சிரமங்கள் ஏதுமின்றியே• எல்லா அறமும் தரும் = அது தானாகவே அவனுக்கு மற்ற எல்லா நற்பண்புகளையும் புண்ணியப் பலன்களையும் கொண்டுவந்து சேர்க்கும்.
மு.வரதராசன்
ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
பரிமேலழகர்
பொய்யாமை அன்ன புகழ் இல்லை - ஒருவனுக்கு இம்மைக்குப் பொய்யாமையை ஒத்த புகழ்க் காரணம் இல்லை. எய்யாமை எல்லா அறமும் தரும் - மறுமைக்கு மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையும தானே கொடுக்கும். ('புகழ்' ஈண்டு ஆகுபெயர். இல்லத்திற்குப் பொருள் கூட்டல் முதலியவற்றானும், துறவறத்திற்கு உண்ணாமை முதலியவற்றானும் வருந்தல் வேணடுமன்றே? அவ்வருத்தங்கள் புகுதாமல் அவ்விருவகைப் பயனையும் தானே தரும் என்பார், 'எய்யாமை எல்லா அறமும் தரும்' என்றார்.)
சாலமன் பாப்பையா
பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.
Meaning in English
No praise like that of words from falsehood free; This every virtue yields spontaneously





