உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.
uLLattAR poyyA tozhukin ulakattAruLLattu LellAm uLan
Dr. Subrahmanyam Kalyan
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன் மனமறியப் பொய் பேசாமல் வாய்மை நெறியில் வாழ்கின்ற ஒருவன், இவ்வுலகத்து மக்கள் மற்றும் சான்றோர்கள் அனைவரது உள்ளங்களிலும் நீங்காமல் தெய்வம்போல் நிலைத்து வாழ்வான்.
• உள்ளத்தால் = தன் சொந்த மனமறிய• பொய்யாது ஒழுகின் = பொய் பேசாமல் உண்மை நெறியில் ஒருவன் வாழ்வானானால்,• உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் = இவ்வுலகத்துச் சான்றோர்கள் மற்றும் மக்கள் அனைவரின் உள்ளங்களிலும்• உளன் = அவன் நீங்காமல் நிலைபெற்று வாழ்வான்.
மு.வரதராசன்
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
பரிமேலழகர்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம். ('உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம். பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல் அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.
Meaning in English
True to his inmost soul who lives,- enshrined He lives in souls of all mankind





