பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்.
poymmaiyum vAymai yiTatta puraitIrntananmai payakku menin
Veeramanidassan
பொருள் / உரை
முருகா எளிய உரை
எந்தவிதக் குற்றமும் இல்லாத தூய நன்மையையும் உயிர்காக்கும் அறத்தையும் தருமானால், பொய் என்று கருதப்படும் சொல்லும் கூட மெய்ம்மையான வாய்மையின் நிலையைப் பெறும்.
• புரை தீர்ந்த = யாதொரு சுயநலமும் குற்றமும் இல்லாத தூய்மையான• நன்மை பயக்கும் எனின் = மிகப்பெரிய நன்மையை (உயிர்காக்கும் அறத்தை) விளைவிக்கும் என்றால்,• பொய்ம்மையும் = பொய் என்று கருதப்படும் ஒரு சொல்லும் கூட• வாய்மை இடத்த = மெய்யான உண்மைக்குரிய உயர் நிலையைப் பெறும்.
மு.வரதராசன்
குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.
பரிமேலழகர்
புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - பிறர்க்குக் குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின் , பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பால ஆம். (குற்றம் தீர்ந்த நன்மை : அறம். அதனைப் பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயிர், அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல். நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயின், பொய்ம்மையாம், பயப்பின், மெய்ம்மையானே என்பது கருத்து. இவை இரண்டு பாட்டானும் 'தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் நிகழாதது கூறலும் மெய்ம்மை எனவும், நன்மை பயவாத நிகழ்ந்தது கூறலும், தீங்கு பயக்கும் நிகழந்தது கூறலும் பொய்ம்மை' எனவும் அவற்றது இலக்கணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.
Meaning in English
Falsehood may take the place of truthful word, If blessing, free from fault, it can afford





