களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்துஆவது போலக் கெடும்.
kaLavinA lAkiya Akkam aLaviRantAvatu pOlak keTum
Ramya NSK
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிறரை ஏமாற்றியும் திருடியும் சேர்த்த செல்வமானது முதலில் பெருகுவது போலத் தோன்றும்; ஆனால் இறுதியில் அது தன் எல்லையைக் கடந்து, ஏற்கெனவே இருந்த நல்ல செல்வத்தையும் சேர்த்து அடியோடு அழித்துவிடும்.
• களவினால் ஆகிய ஆக்கம் = களவு, திருட்டு, வஞ்சனை ஆகியவற்றால் சேர்க்கப்பட்ட செல்வமானது,• அளவிறந்து ஆவது போல = எல்லை கடந்து பெருகுவது போலத் தோன்றி,• கெடும் = இறுதியில் இருந்த இடம் தெரியாமல் அடியோடு அழிந்து நாசமாகும்.
மு.வரதராசன்
களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.
பரிமேலழகர்
களவினால் ஆகிய ஆக்கம் - களவினால் உளதாகிய பொருள், ஆவது போல அளவிறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும். (ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர்.
சாலமன் பாப்பையா
திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.
Meaning in English
The gain that comes by fraud, although it seems to grow With limitless increase, to ruin swift shall go





