எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
eLLAmai vENTuvA nenpAn enaittonRungkaLLAmai kAkkatan nenjsu
Bavathayini Nagarajan
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிறரால் இகழப்படாமல் நன்மதிப்போடு வாழ விரும்பும் எவரும், பிறர்க்குரிய எந்த ஒரு சிறு பொருளையும் ஏமாற்றிக் கவர எண்ணாதபடி தன் சொந்த மனத்தைக் களவிலிருந்து கவனமாகக் காத்துக் கொள்ள வேண்டும்.
• எள்ளாமை வேண்டுவான் என்பான் = பிறரால் இகழப்படாமல் உயர்ந்தோரின் நன்மதிப்பைப் பெற விரும்பும் ஒருவன்,• எனைத்து ஒன்றும் = எத்தகைய சிறிய பொருளாயினும்• கள்ளாமை = பிறரை ஏமாற்றித் திருடாமல் இருக்கும்படி• தன் நெஞ்சு காக்க = தன் சொந்த மனத்தைப் பிறர் பொருளைக் கவர நினைக்காதவாறு எச்சரிக்கையோடு காத்துக்கொள்ள வேண்டும்.
மு.வரதராசன்
பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
பரிமேலழகர்
எள்ளாமை வேண்டுவான் என்பான் - வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான், எனைத்து ஒன்று கள்ளாமை தன் நெஞ்சு காக்க - யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக்கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க. ('எள்ளாது' என்னும் எதிர்மறை வினையெச்சம் எள்ளாமை எனத் திரிந்து நின்றது. வீட்டினை இகழ்தலாவது காட்சியே அளவையாவது என்றும்,நிலம், நீர், தீ, வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றி, பிரிவால் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின் கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்த உயிர் பின் பிறவாது என்றும், இன்பமும் பொருளும் ஒருவனால் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயதம் முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து, அவற்றிற்கு ஏற்ப ஒழுகுதல். ஞானத்திற்கு ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக்கொள்ளின் அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்து ஒன்றும்' என்றார். 'நெஞ்சு கள்ளாமல் காக்க' எனவே, துறந்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல் கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.)
சாலமன் பாப்பையா
அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.
Meaning in English
Who seeks heaven's joys, from impious levity secure, Let him from every fraud preserve his spirit pure





