நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல்.
nenjsin tuRavAr tuRantArpOl vanjsittuvAzhvArin vankaNA ril
Radhakrishnan Sethuraman
பொருள் / உரை
முருகா எளிய உரை
மனதில் ஆசைகளைத் துறக்காமல், எல்லாவற்றையும் துறந்த பெரியாரைப் போல வேடமிட்டுத் தன்னை நம்பும் மக்களை ஏமாற்றி வாழ்கின்ற போலிகளை விடக் கொடிய இரக்கமற்ற மனிதர்கள் இந்த உலகத்தில் வேறு எவருமே இல்லை.
• நெஞ்சின் துறவார் = உள்ளத்தால் உலகப் பற்றுக்களையும் ஆசைகளையும் துறக்காமல்,• துறந்தார் போல் = எல்லாவற்றையும் துறந்த புனிதரைப் போல வேடமிட்டு,• வஞ்சித்து வாழ்வாரின் = தன்னை நம்பும் மனிதர்களை ஏமாற்றிப் பிழைப்பவர்களை விட,• வன்கணார் இல் = கொடூரமான இரக்கமற்ற மனிதர்கள் இவ்வுலகில் வேறு எவருமே இல்லை.
மு.வரதராசன்
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.
பரிமேலழகர்
நெஞ்சின் துறவார் - நெஞ்சால் பற்று அறாது வைத்து, துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - பற்று அற்றார் போன்று தானம் செய்வாரை வஞ்சித்து வாழுபவர் போல், வன்கணார் இல் - வன்கண்மையையுடையார் உலகத்து இல்லை. (தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, 'யாம் மறுமைக்கண் தேவராற்பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதும்' என்று அறியாது ஈந்தாரை, அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல். 'அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் அலறும் முந்நீர்த் - தடங்கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி உடம்போடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வர் - மடங்கலஞ் சீற்றத்துப் பின் மானவேல் மன்னர் ஏறே' (சீவக. முத்தி - 244) என்பதனால் அறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின் 'வன்கணார் இல்' என்றார்.)
சாலமன் பாப்பையா
மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.
Meaning in English
In mind renouncing nought, in speech renouncing every tie, Who guileful live,- no men are found than these of 'harder eye'





