பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றுஏதம் பலவுந் தரும்.
paRRaRREm enpAr paTiRRozhukkam eRReRRenREtam palavun tarum
Suchithra Balasubramanian
பொருள் / உரை
முருகா எளிய உரை
'எல்லாப் பற்றுகளையும் துறந்துவிட்டோம்' என்று வாயளவில் கூறிவிட்டு, மறைமுகமாகத் தீய ஒழுக்கத்தோடு வாழ்பவர்களின் கபட வாழ்க்கை, முடிவில் 'ஐயோ! என்ன காரியம் செய்துவிட்டோம்' என்று தாமே தலையிலடித்துக் கதறும்படியான பெருந்துன்பங்களை அவர்களுக்கு உண்டாக்கும்.
• பற்று அற்றேம் என்பார் = வாயளவில் 'நாங்கள் எல்லா ஆசைகளையும் பற்றுக்களையும் துறந்தவர்கள்' என்று வீராப்புப் பேசுவோரின்• படிற்று ஒழுக்கம் = உள்ளொன்று வைத்துப் புறமொன்று வாழும் கபட ஒழுக்கமானது,• எற்று எற்று என்று = 'அந்தோ! என்ன காரியம் செய்துவிட்டோம், ஏன் இப்படிச் சீரழிந்தோம்' என்று தலையிலடித்துக் கொண்டு வருந்தும்படியாக,• ஏதம் பலவும் தரும் = முடிவில் அவர்களுக்கு எண்ணற்ற தீமைகளையும் பெருந்துன்பங்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.
மு.வரதராசன்
பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.
பரிமேலழகர்
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் - தம்மைப் பிறர் நன்கு மதித்தற்பொருட்டு யாம் பற்று அற்றேம் என்று சொல்வாரது மறைந்த ஒழுக்கம், எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும் - அப்பொழுது இனிதுபோலத் தோன்றும் ஆயினும், பின் என் செய்தோம் என்று தாமே இரங்கும்வகை, அவர்க்குப் பல துன்பங்களையும் கொடுக்கும். (சொல் அளவல்லது பற்று அறாமையின் 'பற்று அற்றேம் என்பார்' என்றும், சிறிதாய்க் கணத்துள்ளே அழிவதாய் இன்பத்தின் பொருட்டுப் பெரிதாய் நெடுங்காலம் நிற்பதாய பாவத்தைச் செய்தார், அதன் விளைவின் கண் 'அந்தோ வினையே என்றழுவர்' (சீவக.முத்தி,27) ஆகலின் 'எற்று எற்று' என்னும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் கூடா ஒழுக்கத்தின் இழுக்கம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.
Meaning in English
'Our souls are free,' who say, yet practise evil secretly, 'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cry





