வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும்.
vanjsa manattAn paTiRRozhukkam pUtangkaLaintum akattE nakum
Kamali Sathyamurthi
பொருள் / உரை
முருகா எளிய உரை
உள்ளத்தில் தீய ஆசைகளை வைத்துக்கொண்டு வெளியே துறவிபோல் நடிக்கும் போலி மனிதனின் கபட வேடத்தை, அவனது உடலோடு கலந்து நிற்கும் பஞ்சபூதங்களும் நன்கு அறிந்து அவனுக்குள்ளேயே எள்ளி நகையாடிச் சிரிக்கும்.
• வஞ்ச மனத்தான் = உள்ளத்தில் வஞ்சகமும் தீய ஆசைகளும் நிறைந்த போலியானவனின்• படிற்று ஒழுக்கம் = உலகத்தை ஏமாற்றும் கபட நாடக வேஷ ஒழுக்கத்தைக் கண்டு,• பூதங்கள் ஐந்தும் = அவனது உடலோடு கலந்து நிற்கின்ற நிலம், நீர், தீ, காற்று, விண் ஆகிய ஐம்பூதங்களும்• அகத்தே நகும் = அவனுக்குள்ளேயே தமக்குள் ஏளனமாகச் சிரிக்கும்.
மு.வரதராசன்
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.
பரிமேலழகர்
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் - வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை; பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் - உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும். (காமம் தன் கண்ணே தோன்றி நலியா நிற்கவும், அதனது இன்மை கூறிப் புறத்தாரை வஞ்சித்தலின் வஞ்சமனம் என்றும், அந்நலிவு பொறுக்கமாட்டாது ஒழுகும் களவு ஒழுக்கத்தைப் 'படிற்று ஒழுக்கம்' என்றும் உலகத்துக் களவு உடையார் பிறர் அறியாமல் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையும் அறிந்து, அவனறியாமல் தம்முள்ளே நகுதலின், 'அகத்தே நகும்' என்றும் கூறினார். செய்த குற்றம் மறையாது ஆகலின், அவ்வொழுக்கம் ஆகாது என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா
வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.
Meaning in English
Who with deceitful mind in false way walks of covert sin, The five-fold elements his frame compose, decide within





