ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்எண்ணின் தவத்தான் வரும்.
onnArt teRalum uvantArai yAkkalumeNNin tavattAn varum
Roshan
பொருள் / உரை
முருகா எளிய உரை
தர்மத்திற்கு மாறாகத் தீமை செய்யும் பகைவர்களை அடக்குவதும், தர்மத்தை விரும்பும் நல்லவர்களை வாழ்வில் உயர்த்துவதும் ஆகிய இரண்டுமே தவ வலிமை உடையவர்கள் நினைத்த மாத்திரத்தில் அவர்களுக்குக் கைகூடி வரும்.
• ஒன்னார்த் தெறலும் = தர்மத்திற்குப் பகைவராய் நின்று அழிவு செய்யும் தீயோரை அடக்குதலும்,• உவந்தாரை ஆக்கலும் = தர்மத்தை விரும்பித் துணைநிற்கும் நல்லோரை உயர்த்துவதும்,• எண்ணின் = மனத்தில் நினைத்த மாத்திரத்திலேயே• தவத்தான் வரும் = உண்மையான தவத்தின் வலிமையால் கைகூடி வரும்.
மு.வரதராசன்
தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.
பரிமேலழகர்
ஒன்னார்த் தெறலும் - அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும், உவந்தாரை ஆக்கலும் - அதனை உவந்தாரை உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும் எண்ணின் தவத்தான் வரும் - தவம் செய்வார் நினைப்பராயின், அவர் தவ வலியான் அவை அவர்க்கு உளவாம். (முற்றத் துறந்தார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் உண்மை கூடாமையின், தவத்திற்கு ஏற்றி உரைக்கப்பட்டது. 'எண்ணின்' என்றதனால், அவர்க்கு அவை எண்ணாமை இயல்பு என்பது பெற்றாம். ஒன்னார் பெரியராயினும், உவந்தார் சிறியராயினும், கேடும் ஆக்கமும் நினைந்த துணையானே வந்து நிற்கும் எனத் தவம் செய்வார்மேலிட்டுத் தவத்தினது ஆற்றல் கூறியவாறு.)
சாலமன் பாப்பையா
பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.
Meaning in English
Destruction to his foes, to friends increase of joy The 'penitent' can cause, if this his thoughts employ





