கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும்.
kollAn pulAlai maRuttAnaik kaikUppiellA uyirun tozhum
திருக்குறள் 260: முருகா பாடல்
1 / 2
பொருள் / உரை
முருகா எளிய உரை
கொல்லா நெறியில் வாழ்பவனை!புலாலை உண்ண மறுப்பவனை!எல்லா உயிரும் வாழ்த்திடுமே!கைகூப்பி நின்று தொழுதிடுமே!
• கொல்லான் = எந்தவொரு உயிரையும் தன் கையால் கொல்லாதவனாய்,• புலாலை மறுத்தானை = எவர் கொன்ற மாமிசத்தையும் உண்ணாமல் மறுத்து வாழ்பவனை,• எல்லா உயிரும் = இவ்வுலகில் உள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட எல்லா உயிர்களும்• கைகூப்பித் தொழும் = கைகுவித்துப் போற்றி வணங்கும்.
மு.வரதராசன்
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
பரிமேலழகர்
கொல்லான் புலாலை மறுத்தானை - ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை, எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை குவித்துத் தொழும். (இவ்விரண்டு அறமும் ஒருங்கு உடையார்க்கு அல்லது ஒன்றே உடையார்க்கு அதனால் பயன் இல்லை ஆகலின், கொல்லாமையும் உடன் கூறினார். இப்பேரருள் உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கான் ஆம் என அப் பயனது பெருமை கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் ஊன் உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
Meaning in English
Who slays nought,- flesh rejects- his feet before All living things with clasped hands adore





