தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள்.
tannUn perukkaRkut tAnpiRi tUnuNpAnengnganam ALum aruL
திருக்குறள் 251: முருகா பாடல்
1 / 2
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன்னுடல் பெருக்கப் பிறனுடல் அறுப்பான்!மன்னுயிர் துடிக்க மாமிசம் புசிப்பான்!இன்னருள் அவனுள் எப்படி இருக்கும்?வன்னெஞ்சில் கருணை எங்ஙனம் சுரக்கும்?
• தன் ஊன் பெருக்கற்கு = தன்னுடைய உடலை வளர்த்துப் பெருக்குவதற்காக• தான் பிறிது ஊன் உண்பான் = மற்றொரு வாயில்லா உயிரின் உடலை அறுத்துத் தின்பவன்,• எங்ஙனம் ஆளும் அருள் = தன் நெஞ்சில் எவ்வாறு உயிர்க்கருணையை வளர்த்து ஆள முடியும்? (ஒருபோதும் அவனால் கருணையோடு இருக்க முடியாது).
மு.வரதராசன்
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.
பரிமேலழகர்
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் - தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன், எங்ஙனம் ஆளும் அருள் - எவ்வகையான் நடத்தும் அருளினை? (பயன் இலாத ஊன் பெருக்கலைப் பயன் எனக்கருதி இக்கொடுமை செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறு ஆயிற்று. 'எங்ஙனம் ஆளும் அருள்' என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற இகழ்ச்சிக் குறிப்பு.)
சாலமன் பாப்பையா
தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?
Meaning in English
How can the wont of 'kindly grace' to him be known, Who other creatures' flesh consumes to feed his own





