Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 250

அறத்துப்பால்துறவறவியல்25. அருளுடைமை

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்மெலியார்மேல் செல்லு மிடத்து.

valiyArmun tannai ninaikkatAn tanninmeliyArmER sellu miTattu

Thirukkural

பொருள் / உரை

முருகா எளிய உரை

அருளற்ற ஒருவன் தன்னைவிட எளியவர்களையும் வாயில்லாப் பிராணிகளையும் துன்புறுத்தத் துணியும் போது, தன்னைவிட அதிக வலிமை கொண்டவர் முன்னால் தான் பயந்து நடுங்கி நிற்கும் கையறு நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்; அப்பொழுது அவனுக்கு உயிர்க்கருணை பிறக்கும்.

• தான் தன்னின் = ஒருவன் தம்மைக் காட்டிலும்• மெலியார் மேல் செல்லுமிடத்து = எளியவர்கள் மற்றும் பலவீனமான உயிர்கள் மீது வன்முறை செலுத்தத் துணியும் போது,• வலியார் முன் = தன்னை விட அதிக வலிமை உடையவர்களின் முன்னால்• தன்னை நினைக்க = தான் அஞ்சி நடுங்கி நிற்கும் நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும்.

மு.வரதராசன்

(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

பரிமேலழகர்

வலியார் முன் தன்னை நினைக்க - தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சிநிற்கும் நிலையினை நினைக்க, தான் தன்னின்மெலியார்மேல் செல்லுமிடத்து - அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது. ('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம் என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க.

Meaning in English

When weaker men you front with threat'ning brow, Think how you felt in presence of some stronger foe

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout