பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்அற்றார்மற் றாதல் அரிது.
poruLaRRAr pUppa rorukAl aruLaRRAraRRArmaR RAtal aritu
Mary Jenefer
பொருள் / உரை
முருகா எளிய உரை
பொருளை இழந்த ஏழைகள்கூடக் காலம் மாறும்போது மீண்டும் முயன்று செல்வத்தைப் பெற்று மலர முடியும்; ஆனால், மனித நேயமும் உயிர்க்கருணையும் இல்லாத அருளற்றவர்கள் அடியோடு அழிந்தவர்களே ஆவர், அவர்கள் ஒருபோதும் உயர்நிலை அடைய முடியாது.
• பொருள் அற்றார் = பொருட்செல்வத்தை இழந்த ஏழைகள்• ஒருகால் பூப்பர் = ஒரு காலத்தில் மீண்டும் உழைப்பால் செல்வச் செழிப்பைப் பெற்று மலர்வர்;• அருள் அற்றார் = ஆனால் உள்ளத்தில் கருணையையும் அருளையும் இழந்தவர்களோ• அற்றார் = அடியோடு அழிந்தவர்களே ஆவர்,• மற்று ஆதல் அரிது = அவர்கள் மீண்டும் உய்வடைவது மிகவும் அரிதாகும்.
மு.வரதராசன்
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.
பரிமேலழகர்
பொருள் அற்றார் ஒருகால்பூப்பர்- ஊழான் வறியராயினார் அது நீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் பொலிவர், அருள் அற்றார் அற்றார் மற்று ஆதல் அரிது - அவ்வாறு அன்றி அருளிலாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே; பின் ஒருகாலத்தும் ஆதல் இல்லை. ( 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது, மேல் பொருள் இன்மையொடு ஒருவாற்றான் ஒப்புமை கூறினார் ஆகலின், அது மறுத்து, பிற ஆற்றான் அதனினும் கொடியது என்பது கூறியவாறு.)
சாலமன் பாப்பையா
பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்.
Meaning in English
Who lose the flower of wealth, when seasons change, again may bloom; Who lose 'benevolence', lose all; nothing can change their doom





