அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல்.
aruLsErnta nenjsinArk killai iruLsErntainnA ulakam pukal
திருக்குறள் தமிழ்மறை
பொருள் / உரை
முருகா எளிய உரை
எல்லா உயிர்கள் மீதும் கருணையும் அன்பும் நிறைந்த உள்ளம் கொண்டவர்களுக்கு, இருள் சூழ்ந்த துன்பகரமான நரக உலகத்தில் சென்று விழும் நிலை ஒருபோதும் ஏற்படாது.
• அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு = எல்லா உயிர்களிடமும் இரக்கம் கொண்ட அருள் நிறைந்த மனமுடையவர்களுக்கு,• இருள் சேர்ந்த = அறியாமையும் கொடிய இருளும் சூழ்ந்த• இன்னா உலகம் புகல் = துன்பம் நிறைந்த நரக உலகத்தில் சென்று விழும் நிலை• இல்லை = ஒருபோதும் இல்லை.
மு.வரதராசன்
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
பரிமேலழகர்
இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. ('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.).
சாலமன் பாப்பையா
அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.
Meaning in English
They in whose breast a 'gracious kindliness' resides, See not the gruesome world, where darkness drear abides





