அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணும் உள.
aruTselvanj selvattuL selvam poruTselvampUriyAr kaNNu muLa
Thirukkural
பொருள் / உரை
முருகா எளிய உரை
எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி வாழும் அருட்செல்வமே மனிதன் பெறக்கூடிய தலைசிறந்த செல்வமாகும்; ஏனெனில், பொன் பொருள் போன்ற உலகச் செல்வங்கள் இரக்கமற்ற கொடிய மனிதர்களிடம்கூடக் குவிந்து கிடக்கக்கூடும்.
• அருட்செல்வம் = எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டும் 'அருள்' என்னும் செல்வமே• செல்வத்துள் செல்வம் = உலகிலுள்ள செல்வங்கள் எல்லாவற்றிலும் தலைசிறந்த செல்வமாகும்;• பொருட்செல்வம் = பொன், பொருள், நிலம் போன்ற பொருட்செல்வங்களோ• பூரியார் கண்ணும் உள = இழிந்த தீய மனிதர்களிடமும் இருக்கக்கூடிய சாதாரண பொருட்களேயாகும்.
மு.வரதராசன்
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.
பரிமேலழகர்
செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் - செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம், பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள - அஃது ஒழிந்த பொருளான் வரும்செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான். ( அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம், ஏனை நீசர்கண்ணும் உளவாம்பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.)
சாலமன் பாப்பையா
செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.
Meaning in English
Wealth 'mid wealth is wealth 'kindliness'; Wealth of goods the vilest too possess





