வசையிலா வண்பயன் குன்றும் இசையிலாயாக்கை பொறுத்த நிலம்.
vasaiyilA vaNpayan kunRum isaiyilAyAkkai poRutta nilam
N. Yogeswari
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஈகையும் நற்பண்பும் இல்லாமல் புகழ் பெறாத வீணான மனித உடல்களைச் சுமக்க நேரிடும் பூமியானது, தன்னுடைய வளமான விளைச்சலையும் செழிப்பையும் இழந்து குன்றிப்போகும்.
• இசை இலா = நற்புகழ் ஈட்டாத வெறும்• யாக்கை பொறுத்த நிலம் = மனித உடல்களைச் சுமந்த பூமியானது,• வசை இலா = பழிச்சொல் இல்லாத• வண்பயன் = வளமான விளைச்சலையும் பலன்களையும் தருவதில்• குன்றும் = குறைந்து வறண்டு போகும்.
மு.வரதராசன்
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.
பரிமேலழகர்
இசைஇலா யாக்கை பொறுத்த நிலம் - புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலம் , வசை இலா வண்பயன் குன்றும் - பழிப்பு இல்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும். ( உயிர் உண்டாயினும் அதனால் பயன் கொள்ளாமையின் யாக்கை எனவும் அது நிலத்திற்குப் பொறையாகலின் 'பொறுத்த' எனவும் கூறினார். விளையுள் குன்றுதற்கேது, பாவ யாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு. 'குன்றும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இவை நான்கு பாட்டானும் புகழ் இல்லாதாரது தாழ்வு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.
Meaning in English
The blameless fruits of fields' increase will dwindle down, If earth the burthen bear of men without renown





