வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின்.
vasaiyenpa vaiyattArk kellAm isaiyennumessam peRAa viTin
Saanvi Vishnu
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• இசை என்னும் எச்சம் = ஒருவன் மறைந்த பின்னரும் நிலைத்து நிற்கக்கூடிய 'புகழ்' என்னும் அழியாத எச்சத்தை• பெறாஅ விடின் = ஈட்டிப் பெறாமல் வீணாக வாழ்ந்து போனால்,• வையத்தார்க்கு எல்லாம் = இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும்• வசை என்ப = அத்தகைய வாழ்வே மிகப் பெரிய பழிச்சொல் என்று சான்றோர்கள் கூறுவர்.எளிய விளக்கம்:ஒரு மனிதன் தான் மறைந்த பிறகும் இவ்வுலகில் நிலைத்து நிற்கக்கூடிய நற்புகழ் என்னும் அழியாத செல்வத்தைப் பெறாமல் வாழ்ந்து மறைந்தால், அந்த வாழ்க்கையே அவனுக்கு மிகப்பெரிய பழிச்சொல்லாகும் என்று சான்றோர்கள் கூறுவார்கள்.
மு.வரதராசன்
தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.
பரிமேலழகர்
இசை என்னும் எச்சம் பெறாவிடின் - புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க, அது பெறாது ஒழிவாராயின், வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப - வையகத்தோர்க்கு எல்லாம் அது தானே வசை என்ற சொல்லுவர் நல்லோர். ( 'எச்சம்' என்றார், செய்தவர் இறந்து போகத் தான் இறவாது 'நிற்றலின்' இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா
புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.
Meaning in English
Fame is virtue's child, they say; if, then, You childless live, you live the scorn of men





