Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 235

அறத்துப்பால்இல்லறவியல்24. புகழ்

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்வித்தகர்க் கல்லால் அரிது.

nattampOl kETum uLatAkunj sAkkATumvittakark kallAl aritu

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஈகை செய்வதால் வரும் பொருட்கேட்டைப் புகழுடம்பின் பெரும் செல்வமாகவும், உடலின் மரணத்தைப் புகழின் அழியா வாழ்வாகவும் மாற்றும் பேராற்றல், மெய்யறிவு படைத்த வித்தகர்களுக்கு மட்டுமே உரிய அரிய சிறப்பாகும்.

• நத்தம்போல் கேடும் = தன் புகழுடம்பிற்கு ஆக்கமாகும்படி வரும் பொருட்கேடும் (வறுமையும்),• உளது ஆகும் சாக்காடும் = தன் புகழ் என்றும் நிலைத்து வாழும்படி அடையும் மரணமும்,• வித்தகர்க்கு அல்லால் = மெய்யறிவு படைத்த அறிவார்ந்த ஞானியர்க்கு அன்றி• அரிது = மற்ற சாதாரண மனிதர்களுக்கு வாய்த்தல் மிகவும் அரிதாகும்.

மு.வரதராசன்

புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.

பரிமேலழகர்

நத்தம் (ஆகும்) கேடும் - புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும், உளது ஆகும் சாக்காடும் - புகழுடம்பு உளதாகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் அரிது - சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை. ('நந்து' என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் 'நத்து' என்றாய் பின் 'அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று 'நத்தம்' என்று ஆயிற்று. 'போல்' என்பது ஈண்டு உரையசை. 'ஆகும்' என்பதனை முன்னும் கூட்டி, 'அரிது' என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது; புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூதஉடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது; புகழ் உடம்பு நிற்கப் பூத உடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின் எய்துவார் வித்தகர் ஆகலின், 'வித்தகர்க்கு அல்லால்' அரிது என்றார். இவை இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.

Meaning in English

Loss that is gain, and death of life's true bliss fulfilled, Are fruits which only wisdom rare can yield

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout