நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தேள் உலகு.
nilavarai nILpukazh ARRin pulavaraippORRAtu puttE Lulaku
Sreekrishnan Swaminathan & Varshan
பொருள் / உரை
முருகா எளிய உரை
இப்பூவுலகில் நீண்ட காலம் அழியாமல் நிலைத்து நிற்கும் நற்புகழை ஈட்டி ஒருவன் வாழ்ந்தால், தேவர் உலகமானது தன் உலகத்தில் உள்ள அறிஞர்களைப் போற்றுவதை விட, பூலோகத்தில் புகழ் நிறுவிய அத்தகைய பெருமகனையே முதன்மையாகப் போற்றிக் கொண்டாடும்.
• நிலவரை = இந்த பூவுலகின் எல்லை எங்கும்• நீள்புகழ் ஆற்றின் = நெடுங்காலம் நிலைத்து நிற்கும் நற்புகழை ஒருவன் ஈட்டி வாழ்ந்தால்,• புத்தேள் உலகு = விண்ணுலகமானது (தேவ உலகம்)• புலவரைப் போற்றாது = அங்குள்ள அறிஞர்களையும் முனிவர்களையும் விடுத்து, மண்ணில் அப்புகழ் படைத்தவனையே கொண்டாடும்.
மு.வரதராசன்
நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது..
பரிமேலழகர்
நிலவரை நீள் புகழ் ஆற்றின் - ஒருவன்நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின் புத்தேள் உலகு புலவரைப் போற்றாது - புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது. (புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், புலவரைப் போற்றாது என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், 'புலவர் பாடும் புகழுடையோர்விசும்பின் வலவன் ஏவாவான ஊர்தி எய்துப என்பதம் செய்வினை முடித்து' (புறநா.27), எனப் பிறராலும் சொல்லப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.
Meaning in English
If men do virtuous deeds by world-wide ample glory crowned, The heavens will cease to laud the sage for other gifts renowned





