ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு.
Ita lisaipaTa vAzhtal atuvallatUtiya millai uyirkku
Soundaryaa Ravindran
பொருள் / உரை
முருகா எளிய உரை
இல்லாத ஏழைகளுக்குக் கொடுத்து உதவ வேண்டும்; அதனால் நல்ல புகழ் பெருகும்படி வாழ வேண்டும். அத்தகைய அழியாத நற்புகழைத் தவிர மனித வாழ்க்கைக்கு நிலைத்த லாபம் தரக்கூடியது இவ்வுலகில் வேறொன்றும் இல்லை.
• ஈதல் = வறியவர்களுக்கு மனமுவந்து கொடுத்து உதவுவதும்,• இசைபட வாழ்தல் = அதனால் உலகம் போற்றும் நற்புகழ் உண்டாக வாழ்வதும் ஆகும்;• அது அல்லது = அந்த அழியாத புகழைத் தவிர• உயிர்க்கு = மனித உயிர்களுக்கு• ஊதியம் இல்லை = நிலைத்த பயன் தரக்கூடிய லாபம் வேறொன்றும் இல்லை.
மு.வரதராசன்
வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
பரிமேலழகர்
'ஈதல்' - வறியார்க்கு ஈக, இசைபட வாழ்தல் - அதனால் புகழ் உண்டாக வாழ்க, அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை - அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப்பயன் பிறிது ஒன்று இல்லை ஆகலான்.(இசைபட வாழ்தற்குக் கல்வி, ஆண்மை முதலிய பிற காரணங்களும் உளவேனும் உணவின் பிண்டம் உண்டி முதற்று (புறநா.18) ஆகலின் ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக 'ஈதல்' என்றார். உயிர்க்கு என்பது, பொதுப்படக் கூறினாரேனும்,விலங்கு உயிர்கட்கு ஏலாமையின், மக்கள் உயிர்மேல் நின்றது.)
சாலமன் பாப்பையா
ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.
Meaning in English
See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain





