இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்பெருமை பிறங்கிற்று உலகு.
irumai vakaiterin tINTaRam pUNTArperumai piRangkiR Rulaku
Vijay Yesudas
பொருள் / உரை
முருகா எளிய உரை
இருவகைத் தன்மை தெளிவாய்த் தெரிந்தோர்!இப்பிறவியிலேயே அறமும் பூண்டோர்!அவர் பெருமை உலகில் திகழுமே!யாவற்றையும் தாண்டி உயர்ந்து நிற்குமே!
• இருமை வகை தெரிந்து = பிறவித் துன்பம், முக்தி இன்பம் ஆகிய இரண்டின் தன்மைகளையும் தெளிவாக ஆராய்ந்து அறிந்து,• ஈண்டு = இப்பிறவியிலேயே• அறம் பூண்டார் = உலகப் பற்றுக்களை அறுத்துத் துறவறத்தை மேற்கொண்ட மேன்மக்களின்• பெருமை = மாபெரும் பெருமையே,• உலகு பிறங்கிற்று = இவ்வுலகில் உள்ள எல்லாவற்றையும் விட மிக உயர்ந்து விளங்குவதாகும்.
மு.வரதராசன்
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது
பரிமேலழகர்
இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது
Meaning in English
Their greatness earth transcends, who, way of both worlds weighed, In this world take their stand, in virtue's robe arrayed





